புதுடெல்லி: இந்திய அரசாங்கம், மும்மொழிக் கல்வியை வலியுறுத்தும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதில் உறுதியாக உள்ளது.
இதில் உள்ள சில அம்சங்களை தமிழகம் உட்பட சில மாநில அரசுகள் எதிர்க்கும் வேளையில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி நேற்று உரையாற்றியானர்.
தேசிய கல்விக் கொள்கையால் நாட்டில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி சொன்னார்.
மாணவர்களிடம் காணொளி மூலம் அவர் உரை நிகழ்த்தினார். கல்வி அமைச்சு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய கல்விக் கொள்கை அமலாக்குவது தொடர்பில் ஒரே வாரத்தில் 15 லட்சம் யோசனைகள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் தேசிய கல்விக் கொள்கையும் ஒன்று.
முப்பது ஆண்டு பழமையான கல்வி முறையை இது மாற்றியமைக்கிறது.
"புதிய கல்விக்கொள்கைக்கு ஐந்து ஆண்டுகள் உழைத்தும் இன்னும் பணி முடியவில்லை. புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும். புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த அனை வரும் ஒருங்கிணைய வேண்டும். பழைய கல்விக் கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம். புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது
மேலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
"பழைய கல்விக் கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம். புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் நிகழந்துள்ள நிலையில் நமது கல்வி முறை மாறவில்லை," என்று திரு மோடி மேலும் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை, புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்கவும் வகை செய்கிறது. இதனால் இந்தியாவின் கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது மொழியாக ஏதாவது ஒரு விருப்ப மொழியை எடுத்துப் படிக்கவும் புதிய ேதசிய கல்விக் கொள்கை ஊக்கமூட்டுகிறது.

