பாதுகாப்பான கொவிட்-19 தடுப்பு மருந்தை கூடிய விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனைத்துலக அளவில் மருந்து நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு இரவுபகலாக பணியாற்றி வருகின்றன.
உலக அளவிலான தடுப்பு மருந்துத் தேவைகளில் 60 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மீதுதான் அனைத்து நாடுகளின் பார்வையும் பதிந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, ஹைதராபாத் நகரம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் தடுப்பு மருந்து தேவையில் மூன்றில் ஒரு பங்கைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ள நகர் அது.
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் Ad26.Cov2.S, ஃபுளூஜென் நிறுவனத்தின் கொரோஃபுளூ, சனோஃபி நிறுவனம் கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும் தடுப்பு மருந்துகள் என கொரோனா தடுப்பு மருந்துகள் பலவற்றுக்கும் ஹைதராபாத்துடன் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


