இந்தியாவில் நாளுக்குநாள் பெருகி வரும் கொவிட்-19 கிருமித் தொற்று கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேரை எட்டிவிட்டது. நேற்று முன்தினம் 94,372 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 4,754,356 ஆக அதிரித்துள்ளது. உயிரிழப்பு 78,586 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் ஆறுதலான விஷயமாக, ஒரு நாளில் 70,000க்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வருகின்றனர். அதிக அளவிலான பரிசோதனைகள், சிறப்பான கண்காணிப்பு, உயர்தர மருத்துவ சிகிச்சை மூலம் இது சாத்தியமாகி வருகிறது.
நேற்று முன்தினம் 78,399 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மில்லியனை எட்டியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.88% ஆக உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 58% குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன என்று சுகாதாரத் துறை குறிப்பிட்டது.
சென்ற ஆண்டின் இறுதியில், முதல்முறையாக சீனாவில் வூஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கொவிட்-19 கிருமி கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கிருமி பாதிப்பு அமெரிக்காவையும் தாண்டிவிடும் என்று பிட்ஸ் பிலானி நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது.
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏழு மில்லியனைத் தாண்டும் எனவும், உலகளவில் அதிக பாதிப்புகொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் ராதிகா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை எதிர்பார்த்திருக்கும் உலக நாடுகள்
இந்நிலையில், கொவிட்-19 தடுப்பு தடுப்பு மருந்துத் தேவைகளில் 60 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் இந்தியாவை அனைத்து நாடுகளும் எதிர்பார்த்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் தடுப்பு மருந்து தேவையில் மூன்றில் ஒரு பங்கைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ள ஹைதராபாத் மீது அனைத்து நாடுகளின் கவனமும் குவிந்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் Ad26.Cov2.S, ஃபுளூஜென் நிறுவனத்தின் கொரோஃபுளூ, சனோஃபி நிறுவனம் கண்டுபிடிப்பில் உள்ள தடுப்பு மருந்துகள் என கொரோனா தடுப்பு மருந்துகள் பலவற்றுக்கும் ஹைதராபாத்துடன் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அமித் ஷா
இதற்கிடையே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா கிருமித்தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயக்கம், உடல் சோர்வு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வீடு திரும்பியதாகவும் பின்னர் மீண்டும் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

