‘நீட்’ எதிர்ப்பு வாசகம் அடங்கிய முகக்கவசத்துடன் போராட்டம்

இந்தியாவில் தேசிய அளவிலான ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்களும் எம்.பி.க்களும் நேற்று நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் நேற்று முன் தினம் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், அதற்கு முதல்நாள் சனிக்கிழமையன்று தமிழகத்தில் அத்தேர்வு எழுதவிருந்த மூன்று மாணவர்கள் மன உளைச்சலால் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.

இதையடுத்து, ‘நீட்’ தேர்வு மையங்களுக்கு முன்பாக எதிர்க் கட்சிகளும் மாணவர் அமைப்பினரும் அத்தேர்வினை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், சென்னை கலை வாணர் அரங்கில் தமிழக சட்ட மன்றம் நேற்று கூடியது. அதில் பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ‘நீட் தேர்வை ரத்து செய்’, ‘தமிழக மாணவர்களைக் காக்க வேண்டும்’ எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட வாசகங்களுடன் கூடிய முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் எம்.பி. வசந்த குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதோடு சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெயரையும் சேர்த்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரினோம். ஆனால், சட்டமன்ற நாயகர் அதை ஏற்றுக்கொள்ளாதது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது,” என்றார்.

அத்துடன், ‘நீட்’ விவகாரத்தில் நாடகம் நடத்தி வருவதாகவும் அது தொடர்பில் மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் தரவில்லை என்றும் ஆளுங்கட்சி மீது அவர் குற்றம் சுமத்தினார்.

இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் அவ்வளாகத்திற்கு முன் ‘நீட்’ எதிர்ப்பு முகக்கவசம் அணிந்தும் பதாகை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

“பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை, கிராமப்புற மாணவர்களின் எதிர்காலக் கனவைக் கலைப்பதாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. அத்தேர்வில் தோற்றுவிடுவோமோ என அஞ்சி தமிழகத்தில் மட்டும் 11 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அதனால் ‘நீட்’ தேர்வையும் புதிய தேசிய கல்விக் கொள்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது,” என்று திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறினார்.

மன்றத்தில் பேசிய டி.ஆர்.பாலு, இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon