‘விலை’ கொடுத்து இந்தியர்களை வளைக்கும் முயற்சியில் நேப்பாளம்

இந்திய, சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வரும் வேளையில், இந்தியாவிற்குச் சொந்தமான சில பகுதிகளைத் தன்வசமாக்கிக் கொள்ள நேப்பாளம் குறுக்குவழியைக் கையாண்டு வருவதாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டம், காலாபாணி பகுதியை ஒட்டியுள்ள மூன்று குட்டி, நபி, குன்ஜி ஆகிய மூன்று கிராமங்களைத் தன்னுடைமையாக்கிக்கொள்ளும் முயற்சியில் நேப்பாளம் இறங்கி இருப்பதாக ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

கைலாய மலை வரைக்கும் தனது ராணுவத் தளங்களை சீனா விரிவுபடுத்துவதற்கு நேப்பாளம் உதவி வருவதாக நம்பப்படுகிறது. இதனால், நேப்பாளத்தின் அண்மைய முயற்சியின் பின்னணியில் சீனா இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

அம்மூன்று கிராமவாசிகளையும் அணுகும் நேப்பாள அரசாங்கத்தின் தரகர்கள், அவர்களை நேப்பாளத்திற்கு விசுவாசமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதற்குக் கைம்மாறாக அவர்களுக்கு நேப்பாளக் குடியுரிமையுடன் நிலம், வீடு, பணம் ஆகியவற்றைத் தருவதாகவும் கூறி வலைவீசுவதாக இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அப்பகுதி மக்களுக்கும் நேப்பாள மக்களுக்கும் பல்லாண்டு காலமாக உறவு நீடித்து வருகிறது. இந்தியப் பெண்கள் பலரும் நேப்பாளத்தின் தர்ச்சுலா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் மணமுடித்து உள்ளனர்.

இந்நிலையில், விசுவாசத்தை மாற்றக் கோரி தொலைபேசி அழைப்புகள் வருவது அதிகரித்துள்ள நிலையில், ‘அதற்கு இடமே இல்லை’ என இந்திய அரசுக்கு எழுத்துமூலம் உறுதிமொழி அளிப்பது குறித்து அந்தக் கிராமவாசிகள் சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் இந்தியாவில் உள்ள காலாபாணி, லிபுலேக் ஆகிய பகுதிகளை இணைத்து, நேப்பாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியது நினைவுகூரத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon