இந்தியாவும் ஜெர்மனியும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கான நடவடிக்கைகள் தூதரக அளவில் தொடங்கி உள்ளன.
இது சீனாவுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அண்மைக்காலமாக இந்தியா, சீனா இடையே மோதல் நிலவி வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளின் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆசிய பசிபிக் வட்டார நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
உறுதியான சட்டங்கள் மூலம் அல்லாமல் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை நல்க முன்வரும் நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயல்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பசிபிக் நாடுகளுடனான தூதரக ரீதியிலான உறவை வலுப்படுத்த புது அணுகுமுறையை ஜெர்மனி கையாள உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா மட்டுமன்றி ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆதரவை நீட்டிக்க விரும்புவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நல்லுறவு நீடித்து வந்தது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஒவ்வோர் ஆண்டும் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்தியா, சீனா இடையேயான உறவில் மனக்கசப்பு அதிகரித்துள்ள நிலையில் ஜெர்மனியின் இந்த முடிவு சீனாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

