ஆசையை நிறைவேற்ற அம்மாவுடன் 56,000 கி.மீ. ஸ்கூட்டர் பயணம்; 33 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பினர்

கர்நாடக மாநிலம் மைசூரு நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

அவரது தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது 70 வயது தாய் ரத்னம்மாவை தனிமை வாட்டியது. பேளூரில் உள்ள கோவில் ஒன்றுக்குச் செல்ல பல நாட்களாக நினைத்தும் நடக்கவில்லை என மகனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தாயின் மன நிலையைப் புரிந்துகொண்ட கிருஷ்ணகுமார், இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல விரும்பினார். அதிலும் 40 ஆண்டுகளாக தமது தந்தை பயன்படுத்திய ஸ்கூட்டரிலேயே அம்மாவை அமர வைத்து அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய அவர்கள் முதலில் பேளூர் ஒலேபீடு கோவிலுக்குச் சென்றனர். பின்னர், ஆந்திரா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் என பல மாநிலங்களுக்குப் பயணம் செய்தனர்.

இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர் தாயும் மகனும். 
 
சுமார் ஈராண்டுகள், 9 மாதங்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அவர்கள் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். பயண தூரம் சுமார் 56,000 கிலோ மீட்டர். அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்களது பயணத்தை மேற்கொண்டனர் இவர்கள்.

தாயார் மீது அதீத அன்பு கொண்ட கிருஷ்ணகுமாருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon