திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5.40 மில்லியனைக் கடந்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.30 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 4,644 பேருக்கு கிருமி தொற்றியது கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 131,025 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 37 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை சுமார் 93 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 519 ஆக உள்ளது.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றால் மரணத்தின் விளிம்புக்குச் சென்ற ஒரு நோயாளியைக் கடும் போராட்டத்துக்குப் பின்னர் மருத்துவர்கள் காப்பாற்றியதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயதான அந்த ஆடவர் 72 நாட்களுக்கு முன்பு கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு 43 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அப்போது 20 நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.
"ஜூலை 6ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த ஆடவருக்கு 30 முறை ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்பட்டது. இரண்டு முறை பிளாஸ்மா தெரப்பி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதற்காக 6 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.
"பிசியோதெரப்பி மூலம் அவரது பேச்சுத்திறன் மீட்கப்பட்டது. மருத்துவர்கள் 72 நாட்கள் போராடி அவரை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டுள்ளனர்," என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தாக்கினால் 5 ஆண்டு சிறை
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைத் தாக்குபவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்குக் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
தடுப்பூசி மூன்றாம் கட்ட
பரிசோதனை
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேக்கா நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள 'கொவிஷீல்ட்' கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இன்று முதல் தொடங்க இருப்பதாக புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

