புதுடெல்லி: ஃபேஸ்புக் இந்தியா நடுநிலையுடன்தான் செயல்படுகிறது என்று அதன் தலைவர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார். பல்வேறு குழுக்களிடமிருந்து பெறும் பல்வேறு உள்ளீடுகளின் அடிப்படையில் தங்கள் நிறுவனம் எந்தவிதப் பாகுபாடுமின்றி செயல்படுவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள ஆளும் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்களின் வெறுப்புணர்வுடன் கூடிய கருத்துகளை நீக்கவில்லை என காங்கிரஸ் புகார் எழுப்பியது.
இதே வேளையில் காங்கிரசுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் இந்தியா செயல்படுவதாக பாஜகவும் கூறியதையடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. இருகட்சிகளும் முன்வைத்த குற்ச்சாட்டுகளை ஃபேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
"ஃபேஸ்புக் இந்தியா எடுக்கும் முடிவுகளில் அரசியல் சார்புள்ள தனி நபர்களின் தலையீடு ஏதுமில்லை. மேலும், எந்தவொரு தனி நபரும் ஆதிக்கம் செலுத்த முடியாத வகையில்தான் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்துவிட முடியாது," என்று அஜித் மோகன் கூறியுள்ளார்.
தனி நபர்களுக்கு ஒரு விஷயம் குறித்து சில கோணங்கள் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், ஃபேஸ்புக் தளத்தின் வடிவமைப்பு என்பது அதன் உள்ளடக்கத்தில் எந்தவொரு தனி நபரின் தலையீடும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது என்றார்.
இந்தியாவில் தனது வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பாஜக தலைவர்களின் வெறுப்பூட்டும் பேச்சுக்களை ஃபேஸ்புக் கண்டுகொள்ளவில்லை என கடந்த மாதம் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில் அஜித் மோகன் தமது பேட்டியில், தனி நபரின் அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி சார்பு, மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைகள் உலகளவில் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

