கர்நாடகாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அம்மாநிலத்தில் 2.5 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கையும் 25 ஆயிரத்தை எட்டிப்பிடிக்கும் என இந்திய அறிவியல் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிப்பு விகிதம் இதே போல் நீடித்து வந்தால் கர்நாடகாவில் அடுத்த ஏப்ரலுக்குள் 2.5 மில்லியன் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மார்ச் மாதத்துக்கு முன்பே கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் கர்நாடகாவில் ஏப்ரல் வரை கிருமித் தொற்று பரவவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நவம்பர் முதல் வாரத்துக்குள் கர்நாடகாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டுவிடும் வாய்ப்புள்ளதாகவும் அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில் மொத்த பாதிப்பு 2.5 மில்லியனை எட்டிப் பிடித்தாலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 2.4 மில்லியன் பேர் குணமடைந்திருப்பார்கள் என்றும் 80 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.