புதுடெல்லி: அனைத்துலக மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது.
அந்த அமைப்பின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதே இதற்குக் காரணம் என அதன் இந்திய நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் தெரிவித்தார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘அம்னெஸ்டி’ மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது ஆகியவை தற்செயலானது அல்ல.
“அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான்,” என்று அவினாஷ் குமார் கூறியுள்ளார்.
அண்மைய டெல்லி கலவரம், ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது என்றும், இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர தங்கள் அமைப்பு வேறு ஒன்றும் செய்துவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.