சட்டத் திருத்தத்தை எதிர்த்து 40க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
புதுடெல்லி: அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் அதிபரிடம் மட்டுமே குவிந்திருப்பதை ஏற்க இயலாது என இலங்கை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சுமார் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் அதிபர் கோத்தாபய ராஜபக்சேவிடம் குவிந்திருக்கும் வகையில் சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. எனினும் அதிபர் கோத்தாபயவிடம் மட்டுமே மொத்த அதிகாரமும் குவிந்திருப்பது சரியல்ல என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷா டிசில்வா கூறியுள்ளார்.
“அதிபரைத் தேர்ந்தெடுத்தபோது அவரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கவில்லை. எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் இல்லாத அதிகாரங்கள் இப்போது கொடுக்கப்படுமானால், இதுகுறித்து மக்களிடம் கேட்கப்பட வேண்டும்,” என்று ஹர்ஷா டிசில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் மீறி அதிபரிடம் அதிகாரங்களைக் குவிப்பது என்பது நீதிச் சுதந்திரத்தையும் அரசியல் அமைப்பையும் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய சட்டத்திருத்தங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில் இலங்கை அதிபரால் அந்நாட்டில் அமையும் புதிய அரசை, அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகே கலைக்கமுடியும். முந்தைய ஆட்சியில் இந்தக் காலக்கெடு 4.5 ஆண்டுகளாக இருந்தது.
“அரசியலமைப்பு சபைக்கு மாற்றாக வலுவற்ற நாடாளுமன்ற சபை அமைக்கப்படும் என்பதும் புதிய மாற்றங்களில் ஒன்றாகும். மேலும் தேர்தல் ஆணையம் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட 5 அமைப்புகளில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரமும் அதிபருக்கு வந்து சேரும்,” என எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இத்தகைய மாற்றங்கள் மற்றும் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு தீவிர ஆலோசனையும் ஆராய்ந்து பார்த்தலும் அவசியம். ஏனெனில் இம்மாற்றங்கள் இலங்கையின் அரசியல் அமைப்புச் சுதந்திரத்திலும் மக்களின் இறையாண்மையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை,” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிபரிடம் அதிகாரம் குவிவதை எதிர்த்து தனிநபர்களும் வெவ்வேவேறு அமைப்புகளும் என 40 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை வரும் வெள்ளிக்கிழமை வரை பரிசீலிக்கப்படும் என்றும் அதன் பிறகே அவற்றை விசாரணைக்கு ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அரசியல் அமைப்பின் 20வது சட்டத்திருத்தத்தை ஆதரித்தும் 7 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.