கொவிட்-19 தாக்கத்தால் ஏற்கெனவே நசிந்து போயிருக்கும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு மேலும் ஒரு இடியாக அமைந்துள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானப் பயண நுழைவுச் சீட்டுகளுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என இந்தியாவின் உள்நாட்டுப் பயணங்களுக்கான விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, பொதுமுடக்கத்துக்கு அப்பாற்பட்ட காலத்தில், கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவற்றில் பயணம் செய்வதற்காக மக்கள் செலுத்திய கட்டணத்தையும் பற்றுச் சீட்டுகளாக வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துளது.
அந்த பற்றுச் சீட்டுகளை பயணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை எந்தத் தடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்; ஒருவேளை அதுவரை பயன்படுத்தாவிட்டால், அதற்கான கட்டணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் அந்த உத்தரவு வழிவகுக்கிறது.
நீதிபதி அஷோக் பூஷன் தலைமையிலான மூன்று நபர் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு US$500 million (S$681 million) வரையிலான செலவை ஏற்படுத்தக்கூடும். விமான நிறுவனங்களின் மீட்சியை இது இன்னும் சிரமமாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மற்ற நாடுகளிலும் பல விமான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக பற்றுச்சீட்டுகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பயணங்களுக்குப் பதிவு செய்து, ஆனால் பயன்படுத்த முடியாமல் போல பலர் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.