இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானம் வழியாக தங்கம் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் கோழிக்கோடு மாவட்டம், கொடுவல்லி நகராட்சி மன்ற உறுப்பினரான கேரட் ஃபைசாலை (படம்) சுங்கத் துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தங்கக் கடத்தல் சம்பவத்திற்கு ஃபைசாலே மூளையாகச் செயல்பட்டார் என்று சுங்கத்துறை கூறியதாக 'மனோரமா நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் ஃபைசாலின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. அத்துடன், ஃபைசாலின் கைபேசியில் உள்ள தகவல்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
தூதரகம் வழியாக ஃபைசால் இதுவரை கிட்டத்தட்ட 400 கிலோ தங்கம் கடத்தியிருப்பதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. அந்த எல்லாச் சம்பவங்களிலும் ஃபைசால் பணம் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.
மேல்விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஃபைசால் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதி, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.14.82 கோடி மதிப்பு உடைய 30 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர். தங்கம் இருந்த தூதரக சரக்குப் பை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் துணைத் தூதரகத்திற்கு விநியோகிக்கப்படுவதாக இருந்தது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் நடத்திய விசாரணைகளில் கேரள அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் சிலருக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான பி எஸ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஸ்வப்னா சுரேஷுக்கும் மாநில முதல்வர் பினராஜி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம் சிவசங்கரனுக்கும் தொடர்பிருந்தது உறுதிசெய்யப்பட்டது. அதை அடுத்து, சிவசங்கரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ள சந்தீப் நாயர், அரசாங்கத் தரப்புச் சாட்சியாக மாற விரும்புவதாக தேசிய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் மனு அளித்து இருக்கிறார்.

