புதுடெல்லி: இந்தியாவின் உற்பத்தித் துறை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பரில் வேகமாக வளர்ச்சி கண்டு இருக்கிறது.
கொவிட்-19 காரணமாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக அகற்றப்பட்டதை அடுத்து தேவை அதிகமானதாகவும் அதை ஈடுசெய்ய உற்பத்தி பெருகியதாகவும் தனியார் துறை நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இருந்தாலும் ஆட்குறைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்தியப் பொருளியல் கொவிட்-19 காரணமாக 1979க்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு படுமோசமாக முழு ஆண்டிலும் வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பொருளியல் மீள்வதற்கான அறிகுறிகள் உற்பத்தித் துறை மூலம் தெரியவந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. செப்டம்பரில் உற்பத்தித் துறை 56.8 விழுக்காடு கூடியதாகவும் 2012 ஜனவரிக்குப் பிறகு இதுவே ஆக அதிக அளவு என்றும் 'ஐஎச்எஸ் மார்க்கிட்' என்ற அமைப்பு தொகுத்த அட்டவணை குறிப்பிடுகிறது.
"இந்திய உற்பத்தித் துறை சரியான திசையில் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் பல ஆக்ககரமான அறிகுறிகள் தெரியவருகின்றன," என்று ஐஎச்எஸ் மார்க்கிட் அமைப்பின் பொருளியல் இணை இயக்குநர் டி லிமா தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நிலவரம் எப்படி ஆகுமோ என்பது தெரியவில்லை என்றாலும் இப்போதைக்கு உற்பத்தியாளர்கள் கொஞ்சம் பெருமூச்சுவிட முடியும் என்றார் அவர்.உற்பத்தித் துறை சுறுசுறுப்பு அடைந்த போதிலும் நிறுவனங்கள் தொடர்ந்து ஆறாவது மாதமாக செப்டம்பரில் பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின.
இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதால் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வரும் மாதங்களில் உற்பத்தித் துறைக்கு அவ்வளவாக ஆதரவு அளிக்காது என்று கூறப்படுகிறது.
எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் 56.8% கூடியதாக ஆய்வு தகவல்

