இந்தியாவில் டெல்லியிலும் குஜராத்திலும்தான் கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்குவது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் டெல்லியில் 60,284 கள்ள நோட்டுகளும் குஜராத்தில் 44,580 கள்ள நோட்டுகளும் பிடிபட்டதாக இந்தியாவின் தேசிய குற்றப் பதிவகத் தகவல்கள் கூறுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பைப் பார்க்கும்போது, கர்நாடக மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மட்டும் அங்கு ரூ.478 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கின.
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000, ரூ.500, ரூ.200 மதிப்பிலான நோட்டுகளே அதிகளவு கள்ள நோட்டுகளாகப் பிடிபட்டதை குற்றப் பதிவகத் தரவுகள் காட்டுகின்றன. சென்ற ஆண்டில் டெல்லியில் மட்டும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 8,979 சிக்கின. முந்தைய 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6,457ஆக இருந்தது.
"பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஈராண்டுகளுக்குப் பிறகு கள்ள நோட்டு அச்சடிப்பு வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. பிடிபட்ட கள்ள நோட்டுகள் கிட்டத்தட்ட உண்மையான நோட்டுகளைப் போலவே உள்ளன. உண்மையான நோட்டுகளில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் ஒருவர் கள்ள நோட்டுகளைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. அவை பெரும்பாலும் பங்ளாதேஷ், நேப்பாளம் வழியாக இந்தியாவிற்குள் வருகின்றன," என்று டெல்லி போலிஸ் துணை கமிஷனர் (சிறப்புப் பிரிவு) சஞ்சீவ் குமார் யாதவ் கூறினார்.
கடந்த ஈராண்டுகளில் குஜராத்தில் மட்டும் 30,000க்கு மேற்பட்ட இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன என்றும் அவற்றின் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய்க்கு மேல் என்றும் கூறப்பட்டது. அதேபோல, கடந்த நான்காண்டுகளாக ரூ.2000, ரூ.500 எனப் பெரிய மதிப்பிலான கள்ள நோட்டுகள் குஜராத்தில்தான் அதிகம் சிக்கியதாக அண்மையில் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் அதிகளவில் கள்ள நோட்டுகள் புழங்குவது அங்குள்ள வர்த்தகச் சமூகத்தினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

