இந்தியாவில் உலகிலேயே நீண்ட சுரங்க நெடுஞ்சாலை நேற்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த நெடுஞ்சாைலயை பிரதமர் மோடி அதிகார பூர்வமாக திறந்துவைத்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் ஜூன் 3ஆம் தேதி அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் இந்தப் பாதையை அமைக்க முடிவு செய்தது. இதன் காரணமாக முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயை நினைவுகூரும் வகையில் 'அடல் சுரங்கப்பாதை' என சுரங்கப் பாதைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாஜ்பாயின் கனவு நனவாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.
"அடல் ஜி கனவு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இமாச்சல பிரதேச மக்களின் கனவும் நன வாகியுள்ளது. இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்புக்கு இது புதிய பலத்தைத் தரும். இது உலகத் தரம் வாய்ந்த எல்லை இணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு," என்றும் அவர் சொன்னார்.
பின்னர் லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இமாச்சலப்பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டுவிடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு ஆண்டுக்கு ஆறு மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும்.
இதன் காரணமாக மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையின் நீளம் 9.02 கி.மீட்டர். இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் மூலம் எல்லா வானிலை காலத்திலும் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்ய முடியும்.
மேலும் பயண தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரம் நான்கு மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 ஆயிரம் மீட்டர் (10,000 அடி) உயரத்தில் நவீன வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக நாளுக்கு 3 ஆயிரம் கார்களும் 1,500 சரக்கு வாகனங்களும் செல்ல முடியும்.

