14 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் வெளிநாட்டு ஊழியர்; சுமார் $190,000 அபராதம் தள்ளுபடி

14 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் வெளிநாட்டு ஊழியர்; சுமார் $190,000 அபராதம் தள்ளுபடி

1 mins read
26f63dcb-5481-46aa-b25a-5866f68c4a56
சமூக தொண்டூழியரும் வழக்கறிஞருமான ஷீலா தாமஸ் உடன் பாஸ்கரி ராகவுலு (இடது). படம்/நன்றி: கல்ஃப் நியூஸ் -

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்புகிறார் பாஸ்கரி ராகவுலு, 41.

அவருக்கு அரசாங்கம் விதித்த 511,200 திர்ஹாம் (S$ 189,819) அபராதமும் தள்ளுபடி செய்வதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எமிரேட்சில் சமூக தொண்டூழியரும் வழக்கறிஞருமான ஷீலா தாமஸ் என்பவரின் உதவியுடன் அவர் தாயகம் திரும்புகிறார்.

"தங்க இடமின்றி தவித்தார். அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் சிலரது பெருந்தன்மையால் வாழ்ந்து வந்தார். தாயகம் திரும்பி தனது மகளை முதன் முறையாகப் பார்க்க விரும்பினார். அதனால் இந்த வழக்கை நான் எடுத்துக்கொண்டேன்," என்று ஷீலா தாமஸ் கூறினார்.

சட்டவிரோதமாக, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் காலத்துக்கு அங்கு தங்கியதால் திரு ராகவுலுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராகவுலுவின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, கடந்த 2006ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் வாகனம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார் ராகவுலு.

தாம் வேலை செய்த நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோர வழக்கறிஞர் ஒருவரின் உதவியை நாடினார் ராகவுலு. அந்த வழக்கறிஞர் ராகவுலுவின் கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அவரிடமிருந்து கடவுச்சீட்டை ராகவுலுவால் திரும்பப் பெறமுடியவில்லை.

இதனால், வாழ்வதாரத்துக்காகவும் தாயகத்தில் குடும்பத்துக்க்கு அனுப்பவும் பல்வேறு வேலைகளை அங்கு செய்து வந்தார் ராகவுலு.

அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியபோது, அங்கிருந்து தாயகம் திரும்புவதற்காக அனுமதி பெற்ற அவரிடம் விமானச் சீட்டுக்கான பணம் இல்லாததால் அங்கேயே தங்கிவிட வேண்டியதாயிற்று என்றும் கூறப்படுகிறது.