இந்தியாவில் சுமார் 250 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 சூழலைக் கையாளும் சுகாதரப் பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நியாயமான முறையில் தடுப்பு மருந்து விநியோகம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க மற்றும் தனியார் பிரிவு மருத்துவர்கள், தாதியர், துணை மருத்துவக் குழுவினர், துப்புரவாளர்கள், ASHA பணியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள், கொரோனா தொற்று தடமறிதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் ஆகியோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறுவர்.
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
200 முதல் 250 மில்லியன் மக்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 400 முதல் 500 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்கள் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் கிடைத்துவிடும் என அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.

