புதுடெல்லி: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளும்தான் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு அதிகம் ஆளாவதாக இந்தியாவுக்கான ஐ.நா. அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஆதரிப்பதாக அந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன் முறைகளுக்குத் தீர்வு காண அரசுக்கும் சமுதாயத்துக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
"பின்தங்கிய சமூக குழுக்களைச் சார்ந்த பெண்களும் சிறுமிகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஹத்ராஸ் மற்றும் பலராம்பூரில் அண்மையில் நடந்த பாலியல் பலாத்கார மற்றும் கொலை சம்பவங்கள் சாட்சிகளாக உள்ளன," என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்படுவதில் பின்தங்கிய சமூகத்தினர் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை அண்மைய சம்பவங்கள் நினைவூட்டுவதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் எனினும் அவை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இதற்கிடையே கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள் 263 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

