லிபியாவில் இந்திய ஊழியர்கள் எழுவர் கடத்தப்பட்டனர்; விடுவிக்க அரசாங்கம் தீவிர முயற்சி

1 mins read
3bfccd04-aa47-4e96-95ff-ea109ad8d948
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தைக் கடக்கும் வாகனம். 2016ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்: ராய்ட்டர்ஸ் -

லிபியாவில் கட்டுமானம், எண்ணெய் வழங்கல் துறைகளில் பணிபுரிந்துகொண்டிருந்த இந்தியர்கள் எழுவர் கடத்தப்பட்டதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் வெளி விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்தது.

ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அந்த எழுவரும் அஷ்வரிஃப் எனப்படும் இடத்திலிருந்து கடந்த மாதம் 14ஆம் தேதி கடத்தப்பட்டனர்.

தாயகம் திரும்புவதற்காக திரிபோலியில் உள்ள விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் அவர்கள் கடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

லிபிய அரசாங்கம், சில அனைத்துலக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து அவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துனிசியாவில் இருக்கும் இந்தியத் தூதரகமும் அவர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடத்தப்பட்ட எழுவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களது புகைப்படம் காட்டப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி, லிபியாவுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தியா 2015ஆம் ஆண்டில் ஆலோசனைக் குறிப்பை வெளியிட்டது.

லிபியாவுக்குச் செல்வதற்கு 2016ஆம் ஆண்டில் இந்தியா தடைவிதித்தது. அந்தத் தடை இப்போதும் நடப்பில் இருப்பது குறிப்பிடத்தகக்து.

2015ஆம் ஆண்டில் நான்கு இந்தியர்கள் லிபிஆவில் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல, 39 ஊழியர்கள் மொசூலில் ஐஎஸ் அமைப்பால் கடத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்