'காங்கிரசில் ஒடுக்கப்பட்டேன், ஓரங்கட்டப்பட்டேன்'

'காங்கிரசில் ஒடுக்கப்பட்டேன், ஓரங்கட்டப்பட்டேன்'

1 mins read
6ee3c7e2-e3cb-4586-8e2e-ad04347f626c
-

இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கு திரு நரேந்திர மோடி போன்றவர் தேவைப்படுவதாக பிரபல திரையுலக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தெரிவித்திருக்கிறார். திரு மோடியின் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்த பிறகு குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.

"பாஜக எனக்கு என்ன செய்யும் என்பது பற்றிய எந்த எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. நாட்டுக்கு அக்கட்சி என்ன செய்யப்போகிறது என்பது பற்றியதே எனது எதிர்பார்ப்பு. ஒரு தனிநபர், நமது பிரதமரை 128 கோடி பேர் நம்புகின்றனர். அவர்களது எண்ணம் சரியே என நான் எண்ணுகிறேன்," என்றார் குஷ்பு.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி 2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு தலைவர் சோனியா காந்தியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியபோது, அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் உண்மை நிலை தெரியாமல் அதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதாகக் குறைகூறியுள்ளார். தம்மைப் போன்ற உண்மையான தொண்டர்களை இவர்கள் ஓரங்கட்டி ஒடுக்க முயல்வதாகவும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, குஷ்புவின் பிரிவால் காங்கிரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பாஜகவில் இருப்பதால் அந்தக் கட்சிக்கு எந்த வரவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.