இந்தியாவின் நிதி மையமான மும்பை நகரில் நேற்று பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அது முன்னெப்போதும் இல்லாத வகையிலான மின்தடை எனக் கூறப்படுகிறது.
மின் இணைப்புக் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதே மின்தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருபது மில்லியன் பேர் வசிக்கும் மும்பையில் இதுபோன்ற பெரிய அளவிலான மின்தடை ஏற்படுவது அரிது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மின்தடையால் உள்ளூர் ரயில் சேவை, இணையம்வழி வகுப்புகள், தேர்வுகள் போன்றவை பாதிப்பு அடைந்தன. பல்வேறு பகுதிகளிலும் ரயில்கள் ஆங்காங்கே நின்று விட்டதால் பயணிகள் கீழே இறங்கி நடந்து சென்றனர்.
நேற்றுத் தொடங்கிய கல்லூரி பொது நுழைவுத் தேர்வுகள் ஜெனரேட்டர் வசதியுடன் நடைபெற்றன. இருப்பினும், பெரும்பாலான கல்லூரிகளின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் பாதிக்கப்பட்டன. இதனால், பல கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மும்பை உயர் நீதிமன்றத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளும் மின்தடையால் பாதிக்கப்பட்டன.
மேலும், மருத்துவமனைகளிலும் மின்தடை ஏற்பட்டது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.
ஆனால், விமான நிலைய செயல்பாடுகளில் எந்தத் தடங்கலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, இந்தியாவின் இரு முக்கிய பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மும்பை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் இந்திய நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகுதி பகுதியாக மாலை 5 மணியளவில் திரும்பியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
மின்தடை குறித்து விசாரிக்க மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

