மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் தினேஷ் விஜன் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் பணம் பெற்று பலர் மோசடி செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தார் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் தினேஷுக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் இடையே ஏதேனும் பணப்பரிமாற்றங்கள் நிகழ்ந்தனவா என அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
சுஷாந்த் சிங்கை வைத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டிருந்தார் இயக்குநர் தினேஷ். ஆனால் முதல் படமான 'ராப்தா' வெளியான பிறகு அடுத்த படத்துக்குரிய பணிகள் துவங்கப்படவில்லை.
இது குறித்து கடந்த மாதமே தினேஷிடம் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது இரண்டாவது படம் ஏன் தயாரிக்கப்படவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எத்தகைய பணப்பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிய அமலாக்கத்துறை நேற்று தினேஷ் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதே போல் சுஷாந்த் சிங்குடன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்ட மேலும் பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.