ஓராண்டுக்கு மேலாக கணவரால் கழிவறையில் பூட்டிவைக்கப்பட்ட பெண் மீட்பு

ஓராண்டுக்கு மேலாக கணவரால் கழிவறையில் பூட்டிவைக்கப்பட்ட பெண் மீட்பு

2 mins read
380789a0-1244-4fd7-8a7b-334d85f24f38
ஓராண்டுக்கும் மேலாக கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், பல நாட்களாக சாப்பிடாமல் உடல் வலுவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  படம்: ஏஎன்ஐ -
multi-img1 of 2

ஓராண்டுக்கும் மேலாக கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 35 வயது பெண் ஒருவர், பல நாட்களாக சாப்பிடாமல் உடல் வலுவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவின் பானிப்பட்டுக்கு அருகில் உள்ள ரிஷிபூர் கிராமத்தின் ஒரு வீட்டுக் கழிவறையிலிருந்து அந்தப் பெண்ணை பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகரி ரஜினி குப்தாவும் அவரது குழுவினரும் மீட்கப்பட்டனர்.

நம்பகமானவர்களிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை நேற்று மீட்டதாக ரஜினி குப்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

"ஓராண்டுக்கும் மேலாக ஒரு பெண் கழிவறைக்குள் பூட்டப்பட்டிருபதாகத் தகவல் கிடைத்து இங்கு வந்தோம். அந்தச் செய்தி உண்மைதான் என்பதை அறிந்துகொண்டோம்.

"பல நாட்களாக அந்தப் பெண் எதையும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது," என்று ரஜினி குப்தா குறிப்பிட்டார். மிகவும் பலஹீனமாக இருந்த அந்தப் பெண்ணால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை என்பதை மீட்புப் பணியின்போது எடுக்கப்பட்ட காணொளி காட்டியது.

"அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் பேசியபோது அது உண்மையில்லை என்று தோன்றுகிறது.

"என்னுடைய கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடிகிறது.

"அவரை மீட்டு பின்னர் குளிக்க வைத்தோம். போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலிசார் விரைவில் நடவடிக்கை எடுப்பர்," என்றார் ரஜினி.

திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவருக்கு 15 வயது மகளும் 13, 11 வயதுகளில் இரு மகன்களும் உள்ளனர்.

ஆனால், அந்தப் பெண்ணின் கணவர் நரேஷ் குமார் வேறு விதமாக குறிப்பிடுகிறார். "என் மனைவி மனநலம் சரியில்லாதவர். அவரை வீட்டுக்கு வெளியில் உட்காரச் சொன்னால், அவர் கேட்பதில்லை. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை," என்கிறது அவரது தரப்பு.

அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது தொடர்பான எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. நரேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்தப் பெண் அவரது உறவினரின் பராமரிப்பில் இருக்கிறார்.