கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமலேயே 43 பேர் உயிரிழந்திருப்பது பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருமித்தொற்றால் கர்நாடக மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த செப்டம்பர் வரை 2,316 பேர் கொவிட் -19 நோய்க்குப் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன.
அதேவேளையில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற 620 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கிருமித்தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமலும் மற்ற நோய்கள், உடல்நல பாதிப்புகள் இல்லாமலும்கூட 43 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா கிருமி தொற்றியிருந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், பெங்களூரில் மட்டும் அறிகுறிகள் இல்லாத 43 பேர் பலியாகி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7.3 மில்லியனைக் கடந்துள்ளது.
இவர்களில் 6.38 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 111,266 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.52 விழுக்காடாகவும் குணமடைந்தோர் விகிதம் 87.36 விழுக்காடாகவும் உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

