புதுடெல்லி: போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள கன்னட நடிகை ராகினி அளித்த தகவலின் பேரில் நடிகர் விவேக் ஓபராய் (படம்) வீட்டில் மும்பை போலிசார் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், முதுகு வலிக்காக ராகினி, சிறையின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
மும்பை திரையுலகத்தைப் போலவே கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பலருக்குப் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக அண்மையில் பரபரப்புத் தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் ராகினியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் பல்வேறு முக்கியத் தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.
அவற்றின் அடிப்படையில் நேற்று மும்பையில் உள்ள பிரபல நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள அவரது மைத்துனர் விசாரணைக்கு ஒத்துழைக்காது தலைமறைவாக உள்ளதால் விவேக் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

