ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் எதிர்பார்ப்பது போல, இந்தியாவும் அதன் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் கருத்து சொல்லாமல் இருக்கும் என நம்புவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.
"ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன, இப்போதும் இருக்கின்றன, இனியும் இருக்கும்.
"அதே போல் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதி ஆகும். இந்த உண்மையை உயர்மட்ட ரீதியில் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் சீனாவுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறோம்," என்றார் அனுராக் ஸ்ரீவத்சவா.
முன்னதாக லடாக் என்பது இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி என்று சீன தரப்பில் விமர்சிக்கப்பட்டு இருந்தது.
மேலும் லடாக்கையும் அருணாசலப் பிரதேசத்தையும் சீனா அங்கீகரிக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.
இதற்கு இந்தியா தற்போது திட்டவட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளது.

