கேரள தங்கக் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு முன்னிலையாக வேண்டிய சிவசங்கர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
1523f58c-1975-4a86-85c5-7c56f5b35202
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணைக்காக முன்னிலையாகும்படி கோரப்பட்ட கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். படம்: இந்திய ஊடகம் -

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணைக்காக முன்னிலையாகும்படி கோரப்பட்ட, கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் தொடர்பில் அவர் கோரிய முன்ஜாமீன் மனு வரும் 23-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அவரை கைது செய்யத் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகும்படி சிவசங்கருக்கு சுங்க இலாகா துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகளும் மருத்துவமனையில் அவரது உடல் நிலை குறித்து கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.