சிறப்பு விமானங்களில் 645 கிராம் தங்கம் கடத்தல்

சென்னை: சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்த இருவரிடமிருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் நேற்று குவைத், துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன. 

குவைத்திலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த 40 வயதான சுதாகர் என்பவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து அவரது உடைமைகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது பிரபல தனியார் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்கள் அடங்கிய புட்டிகளில் அவர் தங்கத் துண்டுகளை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் இருந்து 375 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்ட 33 வயதான தமீம் அன்சாரியும் சுங்கத்துறை அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். 

சோதனையின்போது அவரும் சிறு புட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரிடமிருந்து 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.33.30 லட்சம் என அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon