புதுடெல்லி: இந்தியா, ஜப்பான், அெமரிக்கா உள்ளிட்ட கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் இணைகிறது.
இதனால் சீனாவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கூட்டுப் பயிற்சியால் வட்டார நிலைத்தன்மை பாதிக்கப் படும் என்று ஏற்கெனவே சீனா கூறியிருந்தது. இந்த நிலையில் மூன்று நாடுகள் கடற்துறை பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து 'மலபார்' கூட்டு கடற்படை பயிற்சியை ஆண்டுதோறும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன.
முதன்முதலில் கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் 'மலபார்' கூட்டு பயிற்சியை தொடங்கின.
பிறகு 2015ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு கடற்படை பயிற்சியில் ஜப்பானும் நிரந்தர பங்கேற்பாளராக சேர்ந்தது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடுகளும் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் நிரந்தர பங்கேற்பாளராக இணைவதற்கு ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்தது.
இந்த நிலையில் இவ்வாண்டு 'மலபார்' கூட்டுக் கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடல்சார் பாதுகாப்பு களத்தில் மற்ற நாடு களுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வெளிச்சத்தை இந்தியா காணவும் 'மலபார் 2020' கூட்டு கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் கடற்படையும் பங்கேற்கும்," என்று இந்திய ராணுவ அமைச்சு தெரிவித்தது.
"இந்த கூட்டுப் பயிற்சியினால் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு வலுப்படும்," என்றும் அது கூறியது.
இவ்வாண்டு கடற்படை பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக பதற்றம் நிலவும் வேளையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடனான கூட்டு கடற்துறை பயிற்சியில் இணைவது சீனாவுக்கு நெருக்கடியாக அமைந்து உள்ளது.

