கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு சற்றே குறைந்துள்ளதை அடுத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்திவிட வேண்டாம் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
பண்டிகைக்காலமும் குளிர்காலமும் அடுத்தடுத்து வரும் நிலையில் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என அந்த அமைப்பின் வட்டார இயக்குநரான டாக்டர் பூனம் கெத்ராபால் சிங் எச்சரித்துள்ளார்.
"அண்மைய சில வாரங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்றே சரிந்திருப்பதால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மெத்தனப் போக்கு கூடாது. இவ்வட்டாரத்தில் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
"எனவே கொரோனா தொற்றுப் பரவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டும். பிடியைத் தளர்த்தினால் பாதிப்பு அதிகரித்துவிடும்," என்று பூனம் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது வாரமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொவிட்-19 பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு முதல் எட்டு விழுக்காடு வரை குறைந்துள்ளது. இந்தியாவிலும் பங்ளாதேஷிலும் பாதிப்பு குறைந்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்திய நிலவரம்
இதற்கிடையே திங்கட்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 46,791 பேருக்கு புதிதாக கொரோனா கிருமி தொற்றியது உறுதியானது.
மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7.6 மில்லியனை நெருங்கி உள்ளது. 6.73 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர். 748,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

