சுடச் சுடச் செய்திகள்

துபாயில் வேலை தேட சுற்றுப் பயண விசாவில் செல்லத் தடை; இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்து

துபாயில் வேலை தேடுவோர் சுற்றுப் பயண விசாவில் அங்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விசா தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என நூற்றுக்கணக்கான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் துபாய் விமான நிலையத்தில் பல நாட்களாகக் காத்துக் கிடந்தனர். துபாய்க்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சுமார் 300 இந்தியப் பயணிகள் துபாய் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் 80 பேர் மட்டும் துபாய்க்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

“தற்போது 49 பேர் இன்னும் துபாய் விமான நிலையத்தில் உள்ளனர். அவர்களும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவர். விமானச் சேவைகளுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவுகிறது,” என்று கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தான் தூதரகத்தின் தகவலின்படி 1,374 பேர் துபாய்க்குள் நுழைய கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

“மொத்தம் 1,276 பேர் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 98 பேர் இன்னும் துபாய் விமான நிலையத்தில் இருக்கின்றனர். அவர்களும் விரைவில் தாயகத்துக்குத் திரும்புவர்,” என தூதரகப் பேச்சாளர் தெரிவித்ததாக ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி குறிப்பிடுகிறது.   

இந்நிலையில், வேலை தேடும் நோக்கில் துபாய்க்கு வர விரும்புவோரைத் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் குறிப்பிட்டது. பயணத்துக்கான பதிவை மேற்கொள்ளும் இடத்திலும் குடிநுழைவுத் துறை அதிகாரிகளும், ஒருவர் வேலை தேடி துபாய்க்கு செல்வதாக சந்தேகித்தால், அவரது பயணத்துக்கான அனுமதியை மறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

துபாய்க்கு சுற்றுப் பயண விசாவில் செல்வோர், செல்லுபடியாகும் இருவழி விமானச் சீட்டுகள், ஹோட்டலில் தங்குவதற்கான பதிவு, செலவுக்குத் தேவையான பணம் போன்றவற்றை வைத்திருக்கிறார்களா என்பதைப் பரிசோதிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாரும் வேலை தேடி ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு சுற்றுப் பயண விசாவில் செல்லக்கூடாது என இந்தியா பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளுக்கு இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்குப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் இ-மைகிரேட் இணையப் பக்கம் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் நிறுவனங்களும் ஊழியர்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும்  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து துபாய்க்கு சுற்றுப்பயண விசாவில் செல்வோர் இருவழிப் பயணச் சீட்டு வைத்திருப்பது அவசியம் என விமான நிறுவனங்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon