கொவிட்-19 நோய்ப் பரவல் இந்தியப் பொருளியல் மீது ஏற்படுத்தி வரும் தாக்கத்தில் இருந்து மீண்டு, பழைய நிலையை எட்ட பல ஆண்டுகள் ஆகலாம் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா எச்சரித்து இருக்கிறார்.
"எங்களது கணிப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில், இவ்வாண்டு இறுதிவாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கொரோனா தொற்றுக்கு முன்னிருந்த நிலையைக் காட்டிலும் தோராயமாக 6% வீழ்ச்சி காணும். இந்நிலையில் இருந்து மீள்வதற்குப் பல ஆண்டுகாலம் ஆகலாம்," என்று திரு பத்ரா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய திரு பத்ரா, இந்தியாவில் நாணய, நிதிக் கொள்கைகள் கடும் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"இவ்வாண்டின் முதல் காலாண்டில் வரி வருவாய் 32% குறைந்துவிட்டது. இதன் விளைவாக, ஏப்ரல் -ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 121.9% வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பணவீக்கமும் 6 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறது. இத்தகைய சூழலில், வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்கான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவை," என்றார் திரு பத்ரா.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளியல் 23.9% வீழ்ச்சியடைந்த நிலையில், ஒட்டுமொத்தமாக நடப்பாண்டில் பொருளியல் 9.5% சரியலாம் என மத்திய வங்கி கணித்து உள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் நடந்த நாணயக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் திரு பத்ரா இக்கருத்துகளை முன்வைத்தார். இந்த விவரங்கள் நேற்று முன்தினம்தான் வெளியிடப்பட்டன. அக்கூட்டத்தில், பொருளியல் மீட்சி குறித்து உறுப்பினர்கள் தங்களுக்குள் முரண்பட்டதாகக் கூறப்படுகிறது.
நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும் என திரு பத்ரா வலியுறுத்திய நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளியல் வலுவாக மீண்டெழும் என மத்திய வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

