சுடச் சுடச் செய்திகள்

இந்திய மக்கள் அனைவருக்கும் இலவச கொவிட்-19 தடுப்பூசி

இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்து இருக்கிறார்.

பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சி, பீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், நாட்டை ஆளும் கட்சி ஒரு மாநிலத்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி இலவசம் என அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஒடிசாவின் பாலாசோரில் அடுத்த மாதம் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால் பிரதாப் சாரங்கி நேற்று அங்கு பரப்புரையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். அதற்காக, ஒவ்வொருவருக்கும் ரூ.500 செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று சொன்னார்.

இம்மாதம் 20ஆம் தேதி தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய திரு மோடி, “இந்திய விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. முடிவுகள் ஊக்கமளிப்பதாக உள்ளன,” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, ஒடிசா மாநில மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதானும் பிரதாப் சாரங்கியும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் ஆர்.பி.ஸ்வைன் வலியுறுத்தி இருந்தார். அதே நேரத்தில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதில் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் ஸ்வைன் சொன்னார். ஆயினும், தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon