அலாவுதீனின் அற்புத விளக்கு எனக் கூறி மருத்துவரிடம் ரூ.2.5 கோடி மோசடி

அலாவுதீனின் அற்புத விளக்கு எனக் கூறி மருத்துவரிடம் ரூ.2.5 கோடி மோசடி

2 mins read
5d04f4c9-9b06-407f-8aaa-9ab175ac5993
-

கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கு எனக் கூறி, அதை மருத்துவரிடம் இரண்டரைக் கோடி ரூபாய்க்கு (S$457,000) விற்று ஏமாற்றிய சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த விளக்கை விலைகொடுத்து வாங்கிய டாக்டர் லாயிக் கான், அதைத் தேய்த்தபின் தமக்கு உதவி செய்ய பூதம் வராததால் போலிசிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரை ஏமாற்றியதாக இக்ரமுதீன், அனீஸ் என்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.

டாக்டர் லாயிக் கான் அண்மையில்தான் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியதாகக் கூறப்பட்டது.

பல ஆண்டுகளாக பில்லிசூனியம் செய்து வரும் இக்ரமுதீனும் அனீசும் இதற்கு முன்னரும் இதுபோல் பலரை ஏமாற்றி இருக்கலாம் என போலிஸ் சந்தேகிக்கிறது.

"இன்னாரிடம் பணம் பறிக்க வேண்டும் என்று அவர்கள் குறிவைக்கவில்லை. எந்தப் பிரச்சினையானாலும் தீர்த்து வைப்போம் என்று கூறி, தங்களைப் பற்றி பலரிடமும் அவர்கள் கூறி வந்துள்ளனர். இதை நம்பி வேறு சிலரும் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்," என்று போலிஸ் தெரிவித்தது.

அலாவுதீன் விளக்கு உண்மையிலேயே இருந்துள்ளது என்றும் அதிலிருந்து தோன்றும் பூதம் தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் கூறி, மோசடிக்காரர்கள் இருவரும் தன்னை நம்ப வைத்ததாக டாக்டர் கான் கூறினார்.

உண்மையான விளக்கின் மதிப்பு ரூ.2.5 கோடி என்றும் தள்ளுபடி விலையாக ரூ.70 லட்சத்திற்கு அதைத் தரத் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் விற்ற விளக்கு தங்கத்தில் செய்யப்படவில்லை என்றும் அது எஃகினால் ஆனது என்றும் போலிஸ் தெளிவுபடுத்தியது.

அத்துடன், அடுத்த ஈராண்டுகளுக்கு அவ்விளக்கைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மீறினால் குடும்பத்தில் தகாத சம்பவங்கள் நிகழும் என்றும் அவர்கள் அம்மருத்துவரிடம் எச்சரித்தனர். இதனால், தான் பயந்துபோய் இருந்ததாக டாக்டர் கான் தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

"இதற்கிடையே, என் மகனுக்கு உடல்நலமில்லாமல் போனதால் அவனை மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தோம். நிலைமை மோசமானதால் பின்னர் அவனை டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். தாங்கள் அவனைச் சபித்துவிட்டதாகவும் ரூ.50 லட்சம் தரவில்லை எனில் மாந்திரீகத்தின் மூலம் என் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் சபித்துவிடுவோம் என்றும் அவ்விருவரும் என்னை மிரட்டினர். அவ்வப்போது, இப்படி எதையாவது சொல்லி பணம் பறித்து, அவர்கள் கட்டுப்பாட்டில் என்னை வைத்திருந்தனர்," என்று டாக்டர் கான் தமது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இக்ரமுதீனின் உறவினர் ஒருவருக்கு டாக்டர் கான் சிகிச்சையளித்ததை அடுத்து, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.