தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் கொலையுண்ட இந்தியர்; சடலத்தை தாயகத்துக்கு கொண்டுவர உதவி கோரும் குடும்பம்

2 mins read
537d89f5-2135-4754-98de-7eac7669481e
ஜார்ஜியாவில் கொலையுண்ட முகமது ஆரிஃப் மொஹைதீன் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். படம்: இந்திய ஊடகம் -

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இந்தியர், அவரது வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்துப்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடலை தாயகத்துக்குக் கொண்டுவர உதவுமாறு இந்திய அரசையும் தெலுங்கானா அரசையும் அவரது குடும்பத்தார் கோரியுள்ளனர்.

ஹதராபாத்தைச் சேர்ந்த முகம்மது ஆரிஃப் மொஹைதீன் என்பவரைக் கொலை செய்த இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது.

திரு ஆரிஃப் கடந்த 10 ஆண்டுகளாக ஜார்ஜியாவில் உள்ள தோமஸ்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

அண்மையில் வேலை இழந்ததையடுத்து, மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார் 37 வயது ஆரிஃப்.

ஆரிஃபின் குடும்பத்தார் ஹைதராபாத்தின் சஞ்சலகுடா பகுதியில் வசித்து வருகின்றனர். தன்னுடைய வர்த்தகப் பங்காளியுடன் ஆரிஃபுக்கு பிரச்சினை இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு பேசியபோது, சற்று நேரம் கழித்து திரும்ப அழைப்பதாகக் கூறிய ஆரிஃப், தொடர்ந்து அழைத்தும் இரவு 11 மணிவரை அழைப்பை ஏற்கவில்லை என்கிறார் ஆரிஃபின் மனைவி மெஹ்னாஸ் ஃபாத்திமா.

பின்னர், அந்தப் பகுதியில் இருக்கும் தம் உறவினரைத் தொடர்பு கொண்டதில் தம் கணவர் இறந்துபோன செய்தி அறிந்ததாக ஃபாத்திமா குறிப்பிட்டார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், அவரது கடையில் வேலை செய்யும் ஓர் ஊழியர் உட்பட பலர் அவரைத் தாக்கியது தெரியவந்துள்ளது. அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமான ஆரிஃபுக்கு 10 மாத பெண் குழந்தை இருக்கிறார். 10 மாதங்களுக்கு முன்பு சஞ்சலகுடாவில் குடும்பத்தாரைப் பார்த்துவிட்டு, ஜார்ஜியா திரும்பினார் ஆரிஃப்.

தற்போது ஆரிஃபின் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தார் அங்கு சென்ற பிறகுதான் அவரது சடலம் ஒப்படைக்கப்படும் என்று அவரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஜார்ஜியா செல்வதற்கான விசா, பயணச்சீட்டு பெறுவதற்காக அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது அந்தக் குடும்பம்.

குறிப்புச் சொற்கள்