அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் மீண்டும் அங்கு திரும்புவதற்கான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரபு நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு ஒத்துழைப்புக் கழகத்துடன் (ஜிசிசி) ஆலோசனைக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
இதில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஏராளமான இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது அனைத்துலக அளவில் கொவிட்-19 தொற்றுப்பரவல் குறைந்துள்ளது. எனவே, அவர்கள் மீண்டும் அரபு நாடுகளுக்குச் சென்று பணிபுரியத் தயாராகி விட்டனர்," என்றார்
அவர்கள் அரபு நாடுகளுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக தொடர்புடைய நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்தியாவில் இருந்து அதிகளவில் விமானங்களை இயக்குவதற்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு, ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

