ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு: 4 நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும் 575 மாணவர்களுக்கும் தொற்று; அதிர்ச்சியில் பெற்றோர்

ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு: 4 நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும் 575 மாணவர்களுக்கும் தொற்று; அதிர்ச்சியில் பெற்றோர்

2 mins read
158cf0d4-7736-486c-a768-f25de5022394
படம்: ஊடகம் -

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து பள்ளிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது.

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது பள்ளிகளும் மூடப்பட்டன.

இம்மாதம் 2ஆம் தேதி முதல் ஆந்திராவில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இவர்களுக்கு அரை நாட்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படுகின்றன.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கு நாட்களில் 800க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், 550க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள 1.89 லட்சம் அரசுப்பள்ளி ஆசிரியர்களில் 70,790 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 829 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களைப் பொருத்தவரை இதுவரை 95,763 பேருக்கு பரிசோதனை செய்ததில், 575 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு ஆலோசித்து வரும் நிலையில், பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறுவர்களிடையே தோன்றும் கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று குறிப்பிடுகிறது.

இது பெற்றோரிடையே கவலையை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்