புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. முக்கியமாக, தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான தரநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், காற்று மாசுபாட்டால் கொவிட்-19 கிருமித்தொற்று வேகமாகப் பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பாஜக எம்பி ஜகதாம்பிக பால் தலைமையில் நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவிடம் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். "காற்றின் மோசமான தரத்தால் சளி மூலம் வெளியாகும் சுவாசத் துளிகளில் உள்ள கிருமி நீண்ட நேரத்துக்கு காற்றிலேயே உயிர்வாழ முடியும் என்பதால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் உடல்நலமும் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மோசமாக மாசு
படுத்தப்பட்ட 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 84.1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குண
மடைந்துள்ளனர். 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

