போபால்: 200 அடி ஆழமுள்ள ஆழ்துணை கிணற்றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறுவனை நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள சேதுபுராபரா கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் ஐந்து வயது மகன் பிரகலாத் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.
அங்குள்ள ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்ததைக் கவனிக்காத சிறுவன் அதில் தவறி விழுந்தான்.
சிறுவனின் அழுகுரல் சத்தத்தை வைத்தே அவன் கிணற்றுக்குள் விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை, தீயணைப்புத் துறையினருடன் ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக மீட்புப் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் பிரகலாத் மீட்கப்பட்டான். எனினும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும் கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.