அமராவதி: பல்வேறு வழக்குகளில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 55 பெண்களை விடுதலை செய்ய ஆந்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பெண்கள் விடுவிக்கப்பட இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என ஆந்திர உள்துறை அமைச்சர் மேகதொட்டி சுசரிதா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தற்போது 147 பெண் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஆயுள் கைதிகளான இவர்களில் 55 பெண்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் குற்றச்செயல்களில் அதிகம் பங்கு இல்லாதவர்களாக உள்ளனர் என்று அமைச்சர் சுசரிதா கூறியுள்ளார்.
சூழ்நிலையால் இப்பெண்கள் குற்றவாளிகளாக மாறியுள்ளனர். எந்தக் குற்றச் செயலுக்காக தண்டிக்கப்பட்டனரோ அக்குற்றத்தை அவர்கள் மீண்டும் செய்யும் வாய்ப்பு குறைவு என்றும் அமைச்சர் மேகதொட்டி சுசரிதா கூறினார்.
"55 பேரை விடுதலை செய்வது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்படும். அடுத்த வாரம் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறேன். தற்போது எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவால் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மகளிரை சிறையிலிருந்து விடுவிப்பது சமூகத்துக்குப் பலனளிக்கும்," என்றார் அமைச்சர் மேகதொட்டி சுசரிதா.

