சுகாதாரமற்ற வாழ்க்கை முறையே இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றுப்பரவல் குறைவாக இருப்பதற்கு காரணம் என அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலும் அதன் பாதிப்பும் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த செப்டம்பரில் கொரோனா முதல் அலையின் தாக்கம் உச்சத்தைத் தொட்டது. பின்னர் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் இறப்போர் விகிதமும் குறைந்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பது மற்ற நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
"பெரும்பாலான இந்தியர்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். நீண்ட காலமாக சுத்தமின்றி இருப்பதும், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பதும் பெரும்பாலான இந்தியக் குடிமக்களிடம் காணப்படும் அம்சங்கள். இதனால் இந்தியக் குடிமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயல்பாகவே அதிகமாக உள்ளது," என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தியாவில் தொற்றுப் பரவல் குறைய இதுமட்டுமே காரணம் என்று ஒருதரப்பு கூறுவதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். அதேசமயம் அதிகப்படியான நுண்ணுயிரிகளை ஒருவர் வெளிப்படுத்துவது நோய் தொற்றுவதைத் தடுக்க உதவுகிறது என்கிறார்கள்.
"அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதே தொற்றுப் பரவல் குறைய காரணம் என்று கூறுவது தவறு. மக்களின் சுகாதாரமற்ற வாழ்க்கைமுறையும் சுத்தத்தைக் கடைப்பிடிக்காததும் தொற்றுப் பரவலைக் குறைத்துள்ளது. அதற்காக சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கத் தேவையில்லை," என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 835,000 மாதிரிகள் நோய்த்தொற்றைக் கண்டறிவதற்காக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதுவரை 110 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8.6 மில்லியனைக் கடந்துள்ளது என்றும் சுமார் 8 மில்லியன் பேர் கொரோனா கிருமித் தொற்றின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழப்பு 1.48 விழுக்காடாகவும் குணமடைவோர் விகிதம் 92.56 விழுக்காடாகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் குறித்து நடைபெற்ற ஆய்வில் தகவல்

