ஹைதராபாத்: செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலச் சூழலை ஆராய்வதுதான் மங்கள்யான் விண்கலத்தில் உள்ள எம்இஎன்சிஏ சாதனத்தின் முக்கிய பணி என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தச் சாதனம் அனுப்பிய தகவல்களைப் பார்க்கும்போது, செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல இழப்பு துரிதமடைந்து வருவது தெரிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் விஞ்ஞானிகள், கோள்களைச் சுற்றிப் படர்ந்துள்ள வளிமண்டலம் பெரும்பாலும் வாயு மூலக்கூறுகள், மிகச்சிறிய அளவிலான தூசி, துகள்களால் நிரம்பியிருக்கும் என்கின்றனர்.
"பூமி போலவே உள்ள செவ்வாய் கிரகத்தில் வளிமண்டல இழப்பு தற்போது வேகமாக நிகழ்கிறது. அங்கு அதிக அளவில் உருவாகும் தூசிப் புயல்களின் தாக்கம் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
"தவிர, செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம் தொடர்ந்துவெப்பமடைந்து படிப்படியாக விரிவடைந்து வருகிறது. இதுவும் வளிமண்டல இழப்புக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறது," என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமியை ஒப்பிடும்போது செவ்வாயின் வளிமண்டலம் மெல்லியதாக, சிறிதாக இருப்பதாகவும் இதனால்புறக்காரணிகளால் எளிதாக பாதிப்படைகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாயின் வளிமண்டல இழப்பு உட்பட பிற அம்சங்களை மங்கள்யான் மூலம் தொடர்ந்து ஆராய்வதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.