சென்னையைத் தொடர்புப்படுத்தும் 'பைடன்'

சென்னையைத் தொடர்புப்படுத்தும் 'பைடன்'

2 mins read
8b2f42fc-5028-480a-a52e-7b43196a1af3
-

சென்னை: அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற செய்தி வெளிவரும் வேளையில் அதிபராக வென்றிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்பு இருப்பதுபோல கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு துணை அதிபராக இருந்தபோது இந்தியா சென்ற பைடன், 1972ஆம் ஆண்டில் தாம் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டபோது இந்தியாவிலிருந்து பைடன் என்னும் பெயருடன் கூடிய ஒருவரிடம் இருந்து தமக்குக் கடிதம் வந்ததாகக் கூறியிருந்தார்.

மேலும் தமது பல தலைமுறைகளுக்கு முந்திய தாத்தாவான ஜார்ஜ் பைடன் கிழக்கிந்திய கம்பெனியில் கப்பல் மாலுமியாக இருந்த தாகவும் இந்தியப் பெண்ணை அவர் மணந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜார்ஜ் பைடன் பற்றி இந்தியாவில் ஆவணங்களோ பதிவுகளோ இல்லை. அதற்குப் பதிலாக இரு சகோதரர்களில் ஒருவரான கிறிஸ்டோஃபர் பைடன் 19ஆம் நூற்றாண்டில் அப்போதைய மெட்ராஸ் பகுதியில் நன்கு அறியப்பட்டவராக இருந்தாராம். கப்பல் மாலுமியாக இருந்த அவர், 1858ஆம் ஆண்டில் மெட்ராஸில் மறைந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயத்தில் அவரது பெயரைத் தாங்கிய கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டு முன்னால் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கிறிஸ்டோஃபர் பைடனுக்கும் இப்போதைய ஜோ பைடனுக்கும் இடையில் உள்ள உறவு குறித்த அதிகாரபூர்வ பதிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பைடன் என்ற பெயரைத் தாங்கிய காரணத்தால் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அவற்றுக்கு பதில் சொல்லியே களைப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் மேற்கு இந்தியாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.