இந்தியாவை யாராவது சீண்டிப்பார்த்தால் மிகக்கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
திரு மோடி, 2014ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல் ஆண்டுதோறும் எல்லை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு தீபாவளியை அவர் ராஜஸ்தான் ஜெய்சல்மாரில் உள்ள லாங்கேவாலா பகுதியில் வீரர்களுடன் கொண்டாடினார்.
வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றிய பிரதமர், வீரர்களைச் சந்திக்கும் போதுதான் தனக்கு தீபாவளி நிறைவடைந்ததுபோல் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்திய எல்லையைக் காக்கும் பணியில் இருக்கும் வீரர்களை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட திரு மோடி, இன்றைய இந்தியா மற்ற நாடுகளைப் புரிந்துகொள்வதையும் புரிந்துகொள்ளும் கொள்கையையும் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவை யாரேனும் சீண்டிப்பார்க்க முயன்றால் அவர்களுக்கு மிகக்கடுமையான, உக்கிரமமான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் சூளுரைத்தார்.
"புதுமை மூலம் புத்திக்கூர்மை கூடும் என்பதால் வீரர்கள் புத்தாக்கத்தில் ஈடுபட வேண்டும்; இரண்டாவது யோகா பயிற்சி; மூன்றாவது தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். இது புதிய கண்ணோட்டங்களையும் உற்சாகத்தையும் வளர்க்க உதவும்," என்று வீரர்களுக்குப் பிரதமர் மூன்று யோசனைகளைத் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளையும் பயங்கர வாதத் தலைவர்களையும் அவர்களின் இருப்பிடத்துக்குள்ளே சென்று இந்தியா கொன்றுவிடும் என்பது உலகிற்கே தெரியும் என்றாரவர்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டு தூதருக்கு அழைப்பாணை அனுப்பி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தது.

