இந்தியாவில் இணையச் சேவை பொதுப் பயன்பாட்டிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அந்த இணைப்புகளின் எண்ணிக்கை புதிய மைல்கல்லான 750 மில்லியனைத் தாண்டிவிட்டதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இணையச் சேவை பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது.
2015ல் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 340 மில்லியன் இணையத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாகிவிட்டது.
இந்தியாவின் மொத்த இணைய வசதியில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு மட்டும் 35 விழுக்காடு.
இணையத் தொடர்புகளில் பெரும்பாலானவை நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளன. பலரும் கைபேசிகளில் இணைய வசதியைப் பயன்படுத்துகின்றனர்.
இந்திய கைபேசி சேவை நடத்துநர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநரான திரு எஸ்.பி. கோக்கர், ஏராளமானோர் கைபேசிகளில் இணையச் சேவையைப் பயன்படுத்தினாலும், இணையக் கட்டமைப்பு வசதி ஏறத்தாழ 50 விழுக்காட்டிலேயே இருப்பதாகவும் இந்த நிலை மேம்பட வேண்டும் என்றும் கூறினார்.
"இன்னும் கூடுதலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இணைய வசதி விலை கட்டுப்படியாக இருக்கும் அதே வேளையில், சேவைத் தரமும் குறையாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்," என்றார் அவர்.
இந்தியாவில் மற்ற தொழில்துறைகளை முன்னேற்றும் துறையாக தொலைத்தொடர்புத் துறை விளங்குவதாகச் சொன்ன திரு கோக்கர், இதை அடித்தளத் துறையாகக் கருதி அரசாங்கம் அதற்கு மேலும் ஆதரவு நல்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஐஐடி-பெங்களூர் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தேபாபிரதா தாஸ், "கொவிட்-19 சூழலில் இணையத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கல்வி, நிதி, சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் இணையச் சேவை பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
எனவே, இணையச் சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது," என்று கருத்துரைத்தார்.
இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே சந்தையில் பெரும் பங்கு வகித்ததாக வேறொரு தகவல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்தடுத்த நிலையில் ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் வருகின்றன.
இந்தியாவில் இணையத் தொடர்புகளின் மொத்த எண்ணிக்கை 750 மில்லியனைக் கடந்துவிட்டாலும், இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதே அளவு என்று கூறிவிட முடியாது என்கின்றனர் தொலைத்தொடர்பு நிபுணர்கள்.
அந்நாட்டில் தற்போது 475 மில்லியன் பேர் இணையச் சேவையைப் பயன்படுத்துவர் என்பது அவர்களின் கணிப்பு.

