கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவின் ஒடிசா மாநில பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவருக்கும் 150 கிராம் அரிசியும் 8 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை மாணவரின் அல்லது அவரது பாதுகாவலரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்கிறது உத்தரவு.
ஆனால், அரசாங்கம் வழங்கும் பணத்தையும் அரிசியையும் தம்முடைய தந்தை வைத்துக்கொண்டு, தமக்கு கெட்டுப்போன உணவைக் கொடுப்பதாக கேந்திரபடா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர்.
சொந்த ஊரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு, மலைப்பாதையில் நடந்தே ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று தம் உரிமையைக் கோரியுள்ள சிறுமியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சமந்த் வர்மா, அந்தச் சிறுமியின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரது தந்தையின் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையையும் சிறுமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் சார்பில் பெற்றுக்கொண்ட அரிசியையும் அவரது தந்தை அவரிடமே திருப்பி வழங்க வேண்டும்.
சிறுமியின் தாயார் ஈராண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். சிறுமி தற்போது, அவரது மாமாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

