மோடி: பயங்கரவாதமே உலகின் ஆகப் பெரிய பிரச்சினை

மோடி: பயங்கரவாதமே உலகின் ஆகப் பெரிய பிரச்சினை

2 mins read
dcb681ae-080a-49fd-b4b8-3679ba6c787e
-

புதுடெல்லி: பயங்கரவாதம்தான் இன்று உலகம் எதிர்கொள்கிற மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளின் 12ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பயங்கரவாதத்துக்குத் துணை போகிற நாடுகளை குற்றவாளிகள் என உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்தியாவின் அண்டை நாடு வட்டார அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மேலும் கடுமையாகச் சாடினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு அமைப்பான 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்ச மாநாட்டிற்கு இம்முறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டின் கருப்பொருளான, உலகளாவிய நிலைத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி என்பது சம காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்துக்கும் பொருந்தும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

"பயங்கரவாத பிரச்சினையானது சீரான முறையில் கையாளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

"உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்தான். அனைத்துலக அமைப்புகளின் திறன்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நடப்புச் சூழலுக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்படாததே இதற்கு முக்கிய காரணம்," என்றார் பிரதமர் மோடி.

இந்தியா பன்முகத்தன்மைக்கு உறுதியான ஆதரவளிக்கும் நாடு என்று குறிப்பிட்ட அவர், இந்திய பாரம்பரியப்படி ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பமாக கருதப்படுகிறது என்றார்.

இந்தியா மருந்துத் துறையில் வலிமையாக உள்ளது என்றும் இதன் காரணமாகவே கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவால் மருந்துகள் வழங்க முடிந்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.