இந்தியாவில் கொவிட்-19 தொற்று 9 மில்லியனைக் கடந்தது

1 mins read
d3b39b74-439c-491f-b2e8-ed3f27822bad
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேரை கொவிட்-19 கிருமி தொற்ற, மொத்த பாதிப்பு 9,004,365ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்றால் மேலும் 584 பேர் மரணமடைய, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132,162ஆனது.

தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் 93.6 விழுக்காடாக உயர்ந்தது.

ஆயினும், 46 நாள்களுக்குப் பிறகு கிருமித்தொற்றில் இருந்து தேறியோர் எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா 1,763,055 பேருடன் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகியவை பட்டியலின் அடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதனிடையே, வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்திராவிடில் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னர் அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்தது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,546 பேரை கொரோனா தொற்றியது; 98 பேர் மரணமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்